Friday, June 24, 2016

A Good Friend.....


"உண்மையான நண்பன் "
😨😨😨😨😨😨😨😨😨😨
நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த கப்பல் நடுக் கடலில் கவிழ்ந்ததில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்து ஒரு தீவில் ஒதுங்கினார்கள். அங்கே மனித நடமாட்டமே இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. உண்ண உணவு எதுவும் இல்லை. ஒதுங்க ஒரு நல்ல இடம் இல்லை. கடுமையாக அலைந்து ஒன்றும் பயனில்லாது போகவே இருவரும் பிரார்த்தனை செய்தனர்.
ஒருவன் கடவுளிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்தான். மற்றொருவனோ ஒரே நிமிடத்தில் தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டான். பிரார்த்தனை முடிந்து அவர்கள் சிறிது தூரம் நடந்த போது அங்கே ஒரு நீரூற்று தென்பட்டது. தாகம் தீர அதில் அவர்கள் தண்ணீர் பருகினார்கள்.
இப்போது பசி வந்து காதை அடைத்தது. மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள். இப்போதும் ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொண்டான். சிறிது தூரம் சென்றதும் ஒரு பழ மரத்தைக் கண்டு ஆவலுடன் பழங்களைத் தின்று பசியாறினார்கள்.
அந்தத் தீவில் வாழ வழி இல்லை என்பதை உணர்ந்து மறுபடியும் அந்தத் தீவிலிருந்து வெளியேறி ஊர் போய்ச் சேர வேண்டும் என்று இருவரும் இறைவனைப் பிரார்த்தித்தார்கள். வழக்கம் போல ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டான். என்ன ஆச்சரியம். அப்போது அத்தீவின் பக்கம் ஒரு கப்பல் வந்தது. இவர்கள் கூச்சல் போட்டதும் கப்பலில் இருந்தவர்கள் இவர்களைக் கவனித்து, வந்து இருவரையும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தவனின் மனதில் ஒரு வஞ்சக எண்ணம் உருவானது. அவன் மற்றவன் கப்பலில் ஏற கூடாது என்று தடுத்தான். ஏன் என்று அனைவரும் கேட்க அவன் சொன்னான், ''ஒவ்வொரு முறையும் நான் நீண்ட நேரம் வேண்டி உருகிக் கடவுளை வழிபட்டு ஒவ்வொன்றையும் அடைந்தேன். இவனோ பேருக்குப் பிரார்த்தனை செய்தவன். இவனுக்கு இந்த பலனை அடையத் தகுதியில்லை,
''அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது, ''மூடனே, உன்னால் தான் எல்லாம் நடந்தது என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் உன் நண்பனின் பிரார்த்தனைக்குத் தான் எல்லாமே கிடைத்தது. ஒரு நிமிடம் தான் வேண்டினாலும் அவன் என்ன வேண்டினான் தெரியுமா?' கடவுளே,என் நண்பன் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்து கொடுங்கள்,' என்பது தான்.
அவனுடைய உண்மையான பிரார்த்தனைக்கு செவி சாய்த்துத் தான் நான் எல்லா உதவிகளையும் செய்தேன், ''முதலாமவன் வெட்கித் தலை குனிந்து தன் நண்பனிடம் மன்னிப்புக் கோரினான். பின் கடவுளுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான். மற்றவன் வழக்கம் போல ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து விட்டு தன் வேலையைப் பார்க்கப்போனான்.
😨😨😨😨😨😨😨😨😨😨
நல்லதே நடக்கும் 
வாழ்க வளமுடன்

No comments: