கிருஷ்ணன்:- உண்மையில் மனிதனோடு தொடர்புடையது கர்மங்கள் அல்ல அந்த கர்மங்களோடு சம்மந்தப்பட்ட ஆசைகளேயாகும்.
அர்ஜூனன்:- எவ்வாறு மாதவா?
கிருஷ்ணன்:- நிகழும் இந்த யுத்தத்தில் நீ வெற்றி மீது ஆசை கொண்டு தோல்வியை தழுவினால் அளப்பறிய வேதனை அகத்தை சூலும். அந்த வேதனை உனை ஏனைய காரியங்களை செய்யத்தூண்டும். ஆதலால் நீ மறு ஜென்மம் எடுப்பாய். ஒருவேலை போரில் வெற்றி பெற்றால் உன்னில் அகங்காரம் ஓங்கும். அந்த அகங்காரம் உன்னில் அகிலத்தை வெல்லும் ஆசையை தூண்டும். ஆதலால் படுகொலைகளை செய்வாய். பாவக்கடல்தனில் மூழ்குவாய். சிந்தித்துப்பார், ஒருவேலை நடக்கும் யுத்தத்தில் வெற்றியின் மோகமோ, தோல்வியின் பயமோ இல்லாதிருந்தால் யுத்தத்தின் இறுதியில் நீ பெறுவது சுகமா? இல்லை துக்கமா பார்த்தா?
அர்ஜூனன்:- சுகமும் அன்று மாதவா! துக்கமும் அன்று
கிருஷ்ணன்:- எனில் உன்னுடைய சுகம் துக்கம், வேதனை நிராசை அகங்காரத்திற்கு இந்த யுத்தம் காரணம் அல்ல. நிகழும் யுத்தத்தோடு நீ கொண்டிருந்த அளப்பறிய ஆசைகளே அதற்கு காரணமாகிறது. எனது வார்த்தைகள் சத்தியம் தானே பார்த்தா?
அர்ஜூனன்:- ஆம் மாதவா!
கிருஷ்ணன்:-
(ஸுக துகே ஸமே க்ருத்வா லாபா லாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி-2.38)
அதாவது சுக துக்கத்தை சமமாய் பாவித்து, லாபம் நஷ்டம் வெற்றி தோல்வி பற்றி எண்ணாமல் நீ யுத்தம் புரிந்தால் தனஞ்ஜெயா, நீ என்றும் பாவத்தின் பாகமாக மாட்டாய். இதையே கர்ம யோகம் என்று கூறுவர். எவர் ஸாங்கிய ஞானத்தை பெறுகின்றாரோ அவர் ஒன்றை அறிவார், கூட்டில் குடியிருப்பது ஆத்மா என்று உணர்வார். சரீரத்தின் சுகமான அனுபவங்கள் எல்லாம் மரணம் வரையிலேயே! அதாவது அவை உண்மையல்ல வெறும் மாயையே! இதை உணர்ந்தால் கர்ம யோகியாவது இலகுவாகிவிடுகிறது
அர்ஜூனன்:- ஆனால் மாதவா, காரிய பந்தம் நிச்சயம் என்றால் உலக வாழ்வை தியாகம் செய்து துறவரம் மேற்கொள்ளலாம் அல்லவா?
கிருஷ்ணன்:- அந்த எண்ணத்தினால் விளைந்த விளைவு தான் இந்த யுத்தம் என்று உணர்வாய். சிந்தித்துப்பார், சத்வ குணங்கள் அனைத்தும் நிறைந்த தர்மத்தை பற்றி அறிந்தோர் கர்மத்தை விட்டு விலகுகையில் அதர்மம் எண்ணம் கொண்டோர் கரங்கள் அகிலத்தை எரிக்க துவங்குகிறது. அன்று பிதாமகர் தனது சுகத்தை தியாகம் செய்யாது இருந்திருந்தால் அதர்மத்தின் கரம் இன்று ஓங்கியிருக்காது! அன்று உனது தந்தை துறவரத்தின் வழி செல்லாது இருந்திருந்தால் உன் தமயரான தர்மசீலர் யுதிஷ்டிரன் இன்று அரசாண்டிருப்பார். அவரது ராஜ்ஜிய பிரஜைகளும் அவரால் தர்ம ஞானத்தை பெற்றிருப்பார்கள். வேதனை தரும் செய்தி ஒன்றை கூறுகிறேன் கேள், சத்வ குணம் நிறைந்தவர்களால் மட்டுமே அகிலமானது நன்மையை பெறும். ஆனால் அவர்கள் அனைவரும் துறவரம் வழி செல்கின்றனர். நதியின் நீர் ஆவியாகி இல்லாமல் போனால் மீதம் இருப்பது என்ன? பயனற்ற சேரு மட்டுமே மிஞ்சும் அதுபோலவே, சத்வகுண ஞானிகள் அகிலத்தை தியாகம் செய்து விலகிச்சென்றால் தமஸ் குணமானது நிறைந்த அதர்மிகள் அகிலத்தில் நிறைந்துவிடுகின்றனர். அதனால் அகிலத்தில் பாவமும் அதர்மமும் தழைக்கிறது. அந்த விசீத்ர நிலை உருவாகும் போது கர்மயோகி அகண்ட அகிலத்தை காக்க முன்வருகின்றார். ஒரு கர்மயோகி, பலன்கள் ஆசைகளை தியாகம் செய்வார். ஆனால் கர்மங்களை தியாகிக்கமாட்டார். அவரை இந்த அகிலத்தில் வாழ்கின்ற சந்நியாசி எனவும் கூறலாம். நற்காரியங்களை செய்பவர், அதன் பலன்களை புறக்கணிப்பவர். கர்மயோகி தான் ஈன்றவர் இடத்திலோ உறவினர் இடத்திலோ தன் பரஜைகள் இடத்திலோ எந்தவொரு வேண்டுதலையும் முன்வைக்க மாட்டார். துறவரத்தின் பலன் ஒன்றினை மட்டுமே அவர் பெறுவார். ஆனால் அகிலத்தில் பலனை எதிர்ப்பாராத பணிகளை செய்வார்.
அர்ஜூனன்:- மனிதன் வாரிசுகளின் சுகத்திற்காக உழைப்பவனாக விளங்குகையில் தன் வாரிசிடம் இருந்து ஏன் அவன் சுகம் பெறக்கூடாது?
கிருஷ்ணன்:- மானிடர் வாரிசுகளுக்காக செய்யும் கர்மங்கள் அனைத்தும் வியாபாரமா அல்லது அன்பா?
அர்ஜூனன்:- அன்பு மாதவா!!!
கிருஷ்ணன்:- எனில் கர்மத்தின் பிரதிபலன் மேல் இச்சைக் கொள்வது சரியா? எதிர்கால லாபத்தை சிந்தித்தால் அது வியாபாரமாகும் விஜயா! அதில் அன்பு இருக்காது. எந்த மனிதன் தன் வாரிசுகளின் எதிர்காலத்தை நல்முறையில் அமைக்கின்றானோ, தன் வாரிசுகளுக்கு அன்பையும் தர்மத்தையும் எடுத்துரைக்கின்றானோ அவனுடைய வாரிசு மற்ற மனிதரிடம் அன்பினை வெளிப்படுத்த தவறுவதில்லை. வாரிசுகளின் கர்மம், அடுத்தவரிடம் அன்பை வெளிப்படுத்துவதாகிறது! அவரின் கர்மங்களின் மீது ஈன்றவனுக்கு அதிகாரம் இல்லையெனில் அதன்மீது ஆசை மோகம் கொள்வது எவ்வாறு நியாயமாகும். இது பற்றி மேலும் ஆழமாய் சிந்தித்தால் அதிவிரைவாக ஒன்று விளங்கும். இந்த புவி வாழ்வில் ஆசையும் விருப்பமும் கொள்ள வேண்டிய எதுவும் இல்லை என்ற உண்மையின் தெளிவு பிறக்கும் . ஸ்ருஷ்டியே பரமாத்மாவானால், மானிடர் அந்த பரமாத்மாவின் அங்கமானால், அணுவும் அசைவது அவனால் என்ற உண்மையும், ஆத்மாவான மனிதன் ஏதும் இல்லை என்பதும் விளங்கும். இதுவே கர்மயோகத்தின் மூல சித்தாந்தம் பார்த்தா...!
No comments:
Post a Comment