Saturday, October 3, 2015

உண்மை நண்பனின் பேச்சைக் கேட்காதவனுக்கு ஆபத்து உறுதி

நரியின் தந்திரம் - 2
.
மான் பயிர்களை மேய்வதனைக் கண்ட விவசாயி கோபம் கொண்டான். மறுநாள் அந்த மானைப் பிடிப்பதற்காகத் தன்தோட்டத்தில் ஒரு தோலால் செய்யப்பட்ட வலையினை விரித்துவைத்துக் காத்திருந்தான்.
.
மறுநாள் மானுடன் நரி வரவில்லை. மான் மட்டும் வந்து பயிர்களை மேய்ந்தது. அப்போது அது விவசாயி விரித்து வைத்த தோல் வலையில் மாட்டிக்கொண்டது.
.
அடடா இன்று நம் நண்பன் நரி நம்முடன் வரவில்லையே அவன் வந்திருந்தால் இந்தத் தோல் வலையைக் கடித்து, அறுத்து நம்மைக் காப்பாற்றியிருப்பானே’ என்று நினைத்து வருந்தியது.
.
அப்படி அது நினைத்த நேரத்தில் நரி அங்கு வந்தது சேர்ந்தது. நரியைக் கண்டதும் சந்தோஷமடைந்த மான், ‘நண்பா நான் வலையில் அகப்பட்டுக்கொண்டேன். என்னை உடனே காப்பாற்று’ என்று கூறியது.
.
அதற்கு அந்த நரி, ‘நான் நண்பனுக்காக உயிரையே தரக்கூடியவன். ஆனால், நான் இன்று விரதம். தோல்வலையை வாயால் தீண்டமாட்டேன். நாளைக்கு என்றால், நான் உன்னைக் காப்பாற்ற முடியும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்த புதரில் ஒளிந்துகொண்டது.
.
மேய்ச்சலுக்குச் சென்ற தன் நண்பன் இதுவரை திரும்பவில்லையே என்று மானைத் தேடிக்கொண்டுவந்த காகம், விவசாயியின் தோட்டத்தில் வலையில் அகப்பட்டிருந்த மானைக் கண்டது.
.
‘நண்பா! ஏன் இங்கு வந்தாய்? இப்படி ஆபத்தில் சிக்கிக்கொண்டாயே!’ என்று வருத்தத்துடன் கேட்டது காகம்.

நண்பா உன் பேச்சைக் கேட்காமல் நரியுடன் நட்புக்கொண்டேன். அவன் பேச்சை நம்பி இந்தத் தோட்டத்தில் மேயவந்தேன். விவசாயி வலைவிரித்து என்னைப் பிடித்துவிட்டான்’ என்றது.
.
எங்கே அந்த நரி? அவன் உன்னுடன் வரவில்லையா?’ என்று காகம் கேட்டது.
.
அவன்தான் திட்டமிட்டு என்னை இங்கே சிக்கவைத்துள்ளான். என்னை உண்பதற்காக இங்கேதான் எங்காவது ஒளிந்திருப்பான்’ என்றது மான்.
.
உண்மை நண்பனின் பேச்சைக் கேட்காதவனுக்கு ஆபத்து உறுதி என்பது உன் விஷயத்திலும் உண்மையாகிவிட்டதே என்று வருந்திய காகம், மானைக் காப்பாற்ற வழியினைத் தேடியது. அதற்குள் விவசாயி சற்று தொலைவில் வந்துகொண்டிருந்தார்.
.
அவனைக் கண்ட காகம் மானிடம், நண்பா நான் சொல்வதுபோலச் செய். நீ உன் மூச்சை அடக்கிக்கொண்டு இறந்தவன் போலப் படுத்திரு. விவசாயி நீ இறந்துவிட்டதாக நினைத்து, தோல்வலையை உன் கால்களிலிருந்து நீக்கிவிட்டு, அதனைக் கொண்டு சென்று அவன் குடிலில் வைத்துவிட்டு மெதுவாகத்தான் உன்னை அறுக்க வருவான். அவன் தோல்வலையை எடுத்துக்கொண்டு குடிலுக்குள் சென்றவுடன் நான் ஒலி எழுப்புகிறேன். உடனே நீ எழுந்து தப்பிவிடு’ என்றது.
.
மான் அவ்வாறே செய்தது. விவசாயி மான் இறந்துவிட்டதாக நம்பினார். அதன் கால்களிலிருந்து அந்தத் தோல்வலையை நீக்கிவிட்டு, அந்த வலையை எடுத்துச்சென்று தன் குடிலில் வைத்தான்.
.
காகம் ஒலி எழுப்பியது. மான் எழுந்து துள்ளிப்பாய்ந்து ஓடியது. குடிலைவிட்டு வெளியே வந்த விவசாயி மான் ஓடுவதைப் பார்த்தான். அருகில் இருந்த ஒரு பெரிய இரும்புத்தடியை எடுத்து அதனை நோக்கி எறிந்தான். அவன் குறி தப்பிவிட்டது. அந்த இரும்புத்தடி புதரில் ஒளிந்திருந்த நரியின் தலையில் பட்டது. அடிபட்ட நரி துடிதுடித்து இறந்தது.
.
.
இதுக்குத்தான் கெடுவான் கேடு நினைப்பான் என்று சொன்னாங்க

No comments: