யூகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோபில்ஜி என்ற இடத்தில் அல்பேனிய பெற்றோர்க்கு மகளாக 1910ம் ஆண்டு இதே நாளில் (ஆக. 26) அன்னை தெரசா பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ்கோன்க்ஸா போஜாக்கின். அல்பேனிய மொழியில் இதற்கு ‘ரோஜா அரும்பு’ என்று பொருள். ஆகஸ்ட் 26ல் பிறந்தாலும் அவர் திருமுழுக்கு பெற்ற ஆக. 27ம் தேதியையே உண்மை பிறந்தநாளாகக் கருதினார். குழந்தை பருவத்தில் தெரசா மறைப்பணியாளர்களாலும், அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு 12 வயதிற்குள் துறவறம் புக முடிவு செய்தார். 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டார். 1929ல் இந்தியா வந்து டார்ஜிலிங்கில் துறவறம் புகு நிலையினருக்கான பயிற்சியை ஆரம்பித்தார். 1948ல் இந்தியக் குடிமகள் ஆனார். 1950, அக். 7ல் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை துவக்க, கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்தது. இச்சபையின் குறிக்கோளாக அவர் கூறுகையில், `உணவற்றவர்கள், உடையற்றோர், வீடற்றோர், முடமானவர்கள், பார்வையற்றோர், தொழுநோயாளிகள் போன்ற சமூகத்திற்கு பாரமென்று கருதப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களை கவனிப்பதே ஆகும்’ என்றார்.
1952ல் கொல்கத்தாவின் ஒதுக்கப்பட்ட இடத்தில், இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்காக ஒரு இல்லத்தை ஏற்படுத்தினார். இங்கு கொண்டு வரப்படுபவர்களுக்கு மருத்துவக் கவனிப்பும், அவர்கள் சார்ந்த சமய, சடங்குகளுடனான அடக்கமும் அளிக்கப்பட்டது. அழகியதொரு மரணம் என்பது தேவதூதர்களைப் போன்ற உணர்வை பெற்ற பின் மரிப்பதே ஆகும் என்பது இவரது கூற்றாகும். இவ்வாறு 45 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை, எளியோர்க்கும், நோய்வாய்ப்பட்டோர்க்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும் அன்னை தெரசா தொண்டாற்றினார்.
துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய் குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்யத் துவங்கினார். இவரின் பரிசுத்தமான சேவை குறித்து உலகம் முழுவதும் பரவியது. 72ல் பன்னாட்டு புரிந்துணர்வுக்காக ஜவஹர்லால் நேரு விருது பெற்றார். தொடர்ந்து 1979ல் சமாதானத்திற்கான நோபல் பரிசும், 1980ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். 2003, அக். 19ல் அன்னை தெரசாவிற்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களின் மேம்பாட்டிலேயே கவனத்தை செலுத்தியதால் இவரது உடல்நிலை மோசமாகியது. 83, 89ல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். நிமோனியா, கால் எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்பில் அவதிப்பட்ட தெரசா 1997 செப். 5ல் மரணமடைந்தார். இந்திய அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
உடனிருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டாலே முகம் சுளிக்கும் பலருக்கு மத்தியில், எங்கோ பிறந்து இந்தியாவிற்கு வந்து தொழுநோயாளி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவை செய்வது என்பது தொண்டுள்ளம் நிரம்பிய இதயத்தால் மட்டுமே முடியும். தலைமுறை கடந்து நிற்கும் அவரது தூய சேவையை நம் மனதில் நிறுத்தி, நம்மாலான சேவையையும் தொடர்வோம் இந்நாளில்.
No comments:
Post a Comment