நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் (Radhakrishnan) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
l திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற கிராமத்தில் தெலுங்கு பேசும் ஏழ்மையான குடும்பத்தில் (1888) பிறந்தார். திருவள்ளூர் ‘கவுடி’ பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறந்த மாணவனாக இருந்ததால் கல்வி உதவித்தொகைகள் கிடைத்தன.
l திருப்பதி லுத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின் றார். தத்துவப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். உள்நாட்டிலேயே கல்வி கற்ற இவர், உலகம் போற்றும் மேதையாகத் திகழ்ந்தார்.
l இளம் வயதிலேயே பல நூல்களை எழுதியுள்ளார். மேடைப் பேச்சி லும் வல்லவர். பத்திரிகைகளுக்கும் பல கட்டுரைகள் எழுதினார். அறிஞர்கள் போற்றும் பேரறிஞராகத் திகழ்ந்தார். பதவிகளை அவர் தேடிச் சென்றதில்லை. பதவிகள்தான் அவரை தேடிவந்தன.
l சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகவும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். ‘இந்திய தத்துவம்’ என்ற இவரது நூல் 1923-ல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது.
l பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார். ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கைக் கல்வி, பொது அறிவு ஆகியவற்றையும் கற்றுத் தந்தார். புத்த, சமண மதத் தத்துவங்களோடு, மேற்கத்திய தத்துவங்களையும் கற்று நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.
l இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரையாற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இவரை அழைத்தது. நாடு சுதந்திரம் பெறுவதற்கான ஆயுதமாக தனது சொற்பொழிவுகளைப் பயன்படுத்தினார். வெளிநாடுகளில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகளைப் பறைசாற்றின.
l இவரது புலமை, தத்துவஞானம், எதையும் புரிந்துகொண்டு விளக்கிக்கூறும் சொல்லாற்றலை மகாத்மா காந்தி வியந்து போற்றினார். இவரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன்’ என்றாராம் காந்தி. ‘அனைவருக்கும் ஆசிரியர் போன்றவர் ராதாகிருஷ்ணன். அவரிடம் கற்க ஏராளமான விஷயங்கள் உள்ளன’ என்று நேரு புகழ்ந்துள்ளார்.
l ஆந்திரப் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். பிரிட்டிஷ் அகாடமியின் ‘ஃபெலோஷிப்’ பெற்றார். யுனெஸ்கோ தூதர், பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவர், சோவியத் யூனியன் தூதர் என்று பல பொறுப்புகளை வகித்தவர். நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை 2 முறை வகித்தார். குடியரசுத் தலைவராக 1962-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
l இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது 1954-ல் வழங்கப்பட்டது.
l ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 87-வது வயதில் (1975) மறைந்தார். அவரைப் போற்றும் விதத்தில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment