உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா?
குழந்தையின் வளர்ச்சி என்பதைப் பெரும்பாலான பெற்றோர் அதன் உயரம் மற்றும் எடையைவைத்துக் கணக்கிடுகின்றனர். கொழுகொழுவென இருந்தால், ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என நினைத்துக்கொள்கின்றனர். இவை மட்டுமே, சரியான வளர்ச்சி எனக் கூறிவிட முடியாது. குழந்தை வளர்ச்சியில், அதன் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு மைல் ஸ்டோன்.
மாதந்தோறும் வளர்ச்சி
முதல் இரண்டு மாதங்கள்
பிறந்த குழந்தைக்குக் கண் மங்கலாகத் தெரியும். சில இன்ச் தூரத்துக்கு மேல் சரியாகப் பார்க்க முடியாது. பிறந்த சில நாட்கள் தாய்ப்பால் குடிப்பது, தூங்குவது என்று இருக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாகத் தாயின் குரல், முகம், அரவணைப்பை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளும். ஆறு வாரங்களுக்குப் பின், தாயின் முகத்தை அடையாளம் காணும்.
குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்குள் முகம் பார்த்துச் சிரிக்கும்; பேசுவதைக் கேட்கும்; அம்மாவின் குரல் கேட்டு அழுவதை நிறுத்தும். இது, முதல்கட்ட வளர்ச்சியின் ஆரம்பம். காது நன்றாகக் கேட்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
மூன்றாம் மாதம்
மூன்றாவது மாத முடிவில், குழந்தைக்குக் கழுத்து நிற்கும். அதற்கு முன்னர் தலை நிற்காமலே குப்புற விழுந்தால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகலாம். எனவே, இந்தக் காலத்தில் குழந்தையைக் கண்காணிப்பது நல்லது.
4 - 5 மாதங்கள்
நான்காவது மாதத்தில், குழந்தை ‘மா’, ‘பா’ போன்ற சத்தங்களை ஏற்படுத்தும். ‘ஆஆஆ...’ என்று சத்தம் போட்டுச் சிரிக்கும். பேசுவதற்கு நாக்கைப் பயன்படுத்தத் தெரியாததால், சத்தம் மட்டும் தொண்டையில் இருந்து வரும்.
பொருட்களைக் கவனிக்கத் தொடங்கும். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்கள் கொண்ட பொருட்களைக் காண்பிக்கலாம்.
ஐந்தாவது மாத முடிவில், தலைநின்ற குழந்தை குப்புற விழும்போது, தலையைத் தூக்கிக்கொள்ளும். இது குழந்தையின் முக்கியமான மைல்கல். காலில் கொலுசு மாட்டிவிடுவதால், சத்தம் வரும். அதனால், குழந்தைகள் அதிகமாகக் காலை ஆட்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
6 - 7 மாதங்கள்
இப்போதுதான் குழந்தையால் தலையைத் தூக்கி மேலே பார்க்க முடியும்.
ஆறாவது மாத முடிவில், பிற பொருட்களைப் பிடித்தபடி உட்கார முடியும். கண்ணாடி பார்த்துச் சிரிக்கும், கண் பார்வை சரியாக இருப்பதை நம்மால் காண முடியும். சின்னச்சின்னப் பொருட்களை எடுக்க குழந்தை முயற்சிக்கும்.
குழந்தை, நாக்கைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும். அப்போதுதான் குழந்தைக்கு ‘ங்கா...’ சொல்லத் தெரியும்.
8 - 11 மாதங்கள்
குழந்தைகள் நீந்துவார்கள். வயிறு தரையில் இருக்கும். கை, கால்களை மட்டும் அசைத்து நகர முடியும். இது தவழுதல் கிடையாது.
9-10 மாதங்களில், குழந்தைகள் முட்டி போடுவர். தவழவும் செய்வர். 9 மாதங்களுக்குப் பிறகு, இரண்டு விரல்களைப் பயன்படுத்தி, குழந்தைகளால் பேனாவை எடுக்க முடியும்.
‘மாமா’, ‘அம்மா’, ‘பாப்பா’, ‘நாநா’ போன்ற வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கும். ‘டாட்டா’, ‘பை பை’ சொல்லும்.
‘மாமா’, ‘அம்மா’, ‘பாப்பா’, ‘நாநா’ போன்ற வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கும். ‘டாட்டா’, ‘பை பை’ சொல்லும்.
10-11 மாதங்களில், குழந்தை தானே நகர்ந்து, ஏதாவது ஒரு சப்போர்ட்டுடன் நிற்கும்.
ஒரு வயதுக்குப் பின்
ஒரு வயதில் நடக்கத் தொடங்கும். கையிலிருக்கும் பொருளைத் திரும்பக் கொடுக்கத் தெரியும். அதற்கு முன், எடுத்த பொருளை திரும்பக் கொடுக்கத் தெரியாது.
15-வது மாதத்தில், சம்பந்தமே இல்லாமல் குழந்தைகள் ஏதாவது பேசுவார்கள். அதாவது, ஒலி எழுப்புவார்கள். இதைக் ‘குதலை’ என்பார்கள்.
18-வது மாதத்தில், படிக்
கட்டில் ஒவ்வொரு காலாகச் சேர்த்துவைத்து மட்டுமே படி ஏறத் தெரியும்.
கட்டில் ஒவ்வொரு காலாகச் சேர்த்துவைத்து மட்டுமே படி ஏறத் தெரியும்.
1 ½ - 2 வயது வரை, ‘தண்ணீர் கொடு’ எனத் தன் தேவையைக் கேட்கத் தெரியும். மூளையின் 90 சதவிகித வளர்ச்சி இரண்டு வயதிலேயே நடந்துவிடும்.
2 வயதுக்குப் பிறகு, பெரியவர்களைப் போல படிக்கட்டில் ஏறி, இறங்கத் தெரியும். முழுமையாகப் பேச முடியும். பேசுவது புரியும், அதன்படி செய்யவும் தொடங்கும். நல்லது சொல்லிக்கொடுப்பதை 2 வயதிலிருந்து தொடங்கலாம்.
3 வயதிலிருந்து ‘பார்த்தேன்... செய்தேன்’ என்ற புரிதல் இருக்கும். கதை கேட்டுக் கொள்ளத் தெரியும். தான் ஆணா, பெண்ணா என்பது தெரியும். ட்ரை சைக்கிள் ஓட்டத் தொடங்கும்
4 வயதுக்கு மேல் கதை சொல்லத் தெரியும். என்ன நடந்தது எனச் சொல்லத் தெரியும். அதற்கு முன்னர் எந்தச் சம்பவத்தையும் சொல்லி விளக்கத் தெரியாது.
5 வயதில் அனைத்தும் தெரியும். பேச்சு, கதை, விளையாட்டு போன்றவை புரியும்.
மைல்கல் கவனம்!
இதயம், சிறுநீரகம், மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகளில் பிரச்னை இருந்தால், குழந்தையின் எடை அதிகரிக்காது.
4 கிலோ உள்ள குழந்தை, திடீரென 10 கிலோ ஏறினாலோ, 2 கிலோ குறைந்தாலோ, குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிப்பது முக்கியம்.
2 மாதக் குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கவில்லை; 6 மாதக் குழந்தை குப்புற விழவில்லை; தலை நிற்கவில்லை; 15 மாதங்கள் ஆன பிறகும் நடக்கவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி வளர்ச்சி இருக்காது. சில குழந்தைகளுக்கு சற்றே முன்பின் மாறுபடும்.
குழந்தை ஒல்லியாக இருக்கலாம். ஆனால், சரியான எடையுடன் இருக்கும்பட்சத்தில், அது பிரச்னை இல்லை.
குண்டுக் குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என நினைப்பது தவறு.
‘கியூப்ஸ்’ என்ற விளையாட்டுப் பொருளை அடுக்க 15-வது மாதத்தில்தான் குழந்தைக்குத் தெரியும். இதையே, 7 அடுக்காக அடுக்கிவைக்க, 2 வயதாகும். இதுவே, 10 அடுக்காக அடுக்கிவைக்க, மூன்று வயதாகலாம்.
குழந்தையை வாக்கர் இல்லாமல் இயல்பாக நடக்கவிடுவது நல்லது. வாக்கரில் குழந்தை வேகமாகச் சென்று முட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
ஒன்பது மாதக் குழந்தைக்கு உணவைச் சாப்பிடத் தெரியும். அதனால், தட்டில் உணவைப் போட்டு குழந்தையிடம் கொடுத்துச் சாப்பிடக் கொடுப்பது நல்லது. ஊட்டிவிடுவதைத் தவிர்க்கவும்.
அம்மாவிடம் வளராத குழந்தைகள், 5-10 சதவிகிதம் வரை, தான் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணரும். எனவே, குழந்தைகளைத் தனிமையில் விடக் கூடாது. தனிமை உணர்வில் இருக்கும் குழந்தைகள், பேசுவதற்குத் தாமதமாகலாம். கை சூப்பும் பழக்கமும் ஏற்படலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு…கவனம்!
உணவு, ஊட்டச்சத்து குறைந்தால், உடல் மற்றும் மூளை வளர்ச்சி தாமதமாகும்; பாதிப்புகளும் ஏற்படலாம்.
நாளாமில்லாச் சுரப்பிகள் பிரச்னை இருந்தாலும், வளர்ச்சி சீராக இருக்காது.
தைராய்டு சுரப்பி குறைந்திருந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தைராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டு, குழந்தையை நார்மலாக வளர்க்க முடியும்.
குழந்தை பிறந்த பின், மூன்று நான்கு நாட்களுக்குள் தைராய்டு டெஸ்ட் செய்துகொள்வது நல்லது.
குழந்தைகளுக்கான உணவு
இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முதல் ஆறு மாத காலம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஏழாவது மாதத்தில் இருந்து, திட உணவுகளைச் சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். ஆனால், அவசியம் ஓர் ஆண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
பசும்பால் கொடுத்தால், ஒவ்வாமை வர வாய்ப்புகள் அதிகம். வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஒரு வயதுக்குப் பின் பசும்பால் தரலாம். ஆனால், தண்ணீர் கலக்காமல் கொடுப்பது நல்லது. ஏனெனில், பசும்பாலில் 70 சதவிகிதம் நீர் உள்ளது. அசைவ உணவுகளை ஓர் ஆண்டுக்குப் பின் கொடுக்கலாம்.
முதல் வளர்ச்சி… தாயின் வயிற்றில்
குழந்தையின் வளர்ச்சி என்பது தாய் கருவுற்றிருக்கும்போதில் இருந்தே தொடங்குகிறது. குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி நிர்ணியிக்கப்படுவதும் தாயின் வயிற்றில் இருந்துதான். தம்பதியர் கருத்தரிக்கத் திட்டமிடும்போதே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது, குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உதவும். தண்டுவடம், கபாலம் சரியாக வளராமல் இருந்தால், இதை சரிசெய்ய ஃபோலிக் ஆசிட் மாத்திரை முக்கியமாகிறது. தாயின் மகிழ்ச்சியான மனநிலை மற்றும் ரத்தத்தில் இருந்து வரும் சத்துணவே, குழந்தைக்கு ஊட்டமாகக் கருவில் சேர்கிறது. இரண்டு செல்லாக இருக்கும் ஓர் உயிர், தாயின் வயிற்றில் இருந்து மூன்று கிலோ குழந்தையாக வெளிவருகிறது. எனவே, தாயின் ஆரோக்கியமே, குழந்தையின் ஆரோக்கியம்.
முதல் மூன்று மாதங்கள் (1-3) – உடல் உறுப்புகள் உருவாகும் காலம்
பெரும்பாலான பெண்களுக்கு, தாங்கள் கருவுற்றிருப்பது முதல் மாதத்திலேயே தெரியாது. இதயம், கல்லீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் வளர்ச்சி அடைவது முதல் மூன்று மாத காலங்களில்தான். தாய் ஊட்டச்சத்து உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடியும்.
இரண்டாவது மூன்று மாதங்கள் (4-6) – குழந்தையின் உடல்வளர்ச்சி
தாயின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்தே குழந்தையின் வளர்ச்சியும் முடிவு செய்யப்படுகிறது. மகிழ்ச்சியான காலகட்டமாக அமைத்துக்கொள்வது நல்லது.
மூன்றாவது மூன்று மாதங்கள் (7-9) – குழந்தையின் எடை அதிகரித்தல்.
குழந்தை முழுமையாக வளர்ந்து இருக்கும். சரிபாதி ஊட்டச்சத்து, தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும். இந்தக் காலத்தில் கருவுற்றோர், எளிமையான வேலைகளைச் செய்யலாம். ஆனால், கடினமான உடல் உழைப்பு கூடாது. கர்ப்பிணிகள் ஓய்வு மற்றும் ஊட்டச்சத்து உணவுகளைக் கட்டாயமாக்குவது, குழந்தைக்கும் தாய்க்குமான ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
வளர்ச்சிக்கான மைல்கற்கள்
1.சோஷியல் மைல்கல் – இன்ட்ராக்டிக் கெப்பாசிட்டி
2.மோட்டார் மைல்கல் - கை, கால் அசைத்தல்
3.கிராஸ் மோட்டார் மைல்கல் - எழுந்திருப்பது, நிற்பது, நடப்பது
4.பைன் மோட்டார் மைல்கல் – பொருளை எடுப்பது, கொடுப்பது
5. லாங்்வேஜ் மைல்கல் – பேசும் திறன், புரிதல் திறன்.
No comments:
Post a Comment